Thursday, 13 February 2014

காதலனின் அரண்

 
 
காதலில் ஊடலும் கூடலும் அவசியம் வேண்டும். காதலால் இந்த உலகம் நிரம்பி கிடக்கிறது. காதலிக்காத மனிதர்கள் இருந்தால், பூமியில்  அவர்கள் இரத்தம் இல்லாத சவமாக தான் நடமாடுகிறார்கள். காதலிப்போம் காதலிக்க கற்றுக் கொடுப்போம். காதலால் யாரும் வீழப் போவது இல்லை.
 
இனிய காதலர் தின வாழ்த்துகள் :)
 

Sunday, 6 October 2013

வாழ்த்து அட்டைகள் - 1

   காலை புலர்ந்து சில மணி நேரங்கள் தான் ஆகியிருந்தது. அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து, சில்லென்ற நீரில் குளித்து முடித்தாள். தலையில் தனக்கு பிடித்த வான நீல நிறத்து துண்டை கட்டிக் கொண்டு, தனது அறையிலுள்ள அலமாரியைத் துலாவத் தொடங்கினாள்.

  தன்னிடம் உள்ள புடவைகளிலேயே விலையுயர்ந்த புடவை அது. அவளுடைய மேனியின் நிறத்தை, இன்னும் அழகுபடுத்தும், முத்து நிறத்து காஞ்சிபுரத்து பட்டுப் புடவை. அம்மாவிடமும் அப்பாவிடமும் அடம்பிடித்து வாங்கிய பட்டுப் புடவை.

"உனக்கு கல்யாணமா என்ன? இவ்வளவு விலையுயர்ந்த பட்டு புடவைய நான் என்னோட கல்யாணத்துக்கு கூட கட்டிக்கிட்டது இல்ல" என்று அம்மா அந்த பட்டுப் புடவையை வாங்கி கொடுக்கும் போது கேலி செய்திருந்தாள். சில சமயங்களில் தற்செயலாக வேடிக்கையாக சொல்லும் வார்த்தைகள் கூட, வாழ்க்கையில் பலித்துவிடுகின்றன.

 புடவை கட்டுவது ஒரு கலை. அதில் ஜெயஸ்ரீ கைதேர்ந்தவள் தான். ஆனால், மனதில் வேதனை ஒரு பக்கமும் சந்தோஷம் மறுபக்கமும் சண்டை போட்டுக் கொண்டு இருந்ததால், அவளும் புடவையுடன் இரண்டு மணி நேரம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள். முழு திருப்தி ஏற்படவில்லை. மனதில் இருக்கும் வலிகள், நம்முடைய அங்கங்களில் பிரதிபலிப்பது, மிகவும் ஆச்சரியமான விஷயம் தான்.

அம்மாவும் அப்பாவும் இவளிடம் கொள்ளை ஆசை கொண்டிருந்தார்கள். அது மட்டுமல்லாமல், அப்பாவுக்கு ஊரில் ஒரு தனி கௌரவம் இருக்கிறது. ஆனால், தான் செய்யும் காதல் திருமணம், இதை எல்லாம் அழித்துவிடும் என்று தெரிந்தும் ஜெயஸ்ரீ அதற்கு துணிந்துவிட்டாள்.

அம்மா அப்பாவைப் பற்றி எண்ணிக் கொண்டே, காதில் தோடுகளையும், கழுத்தில் ஒரே ஒரு தங்க சங்கிலியையும், கையில் கண்ணாடி வளையல்களையும் போட்டுக் கொண்டிருந்த சமயத்தில், செல்போன் முணங்கியது.

செல்போனை எடுத்து காதில் வைத்தாள். அப்போது தான் ஜன்னலுக்கு வெளியே சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தது.

"ஹலோ! ரெடி ஆய்ட்டியா ஜெயா?"

தனக்கு உலகிலேயே மிகவும் பிடித்தமான குரல். ஆண்மையுடன் ஸ்டைலையும் கலந்து, ஜெயஸ்ரீயின் பெண்மையை அவளுக்கே உணர வைத்த ரகுவின் குரல்.

"இல்லடா செல்லம். இன்னும் தலை மட்டும் சீவணும்" என்றாள்.

"ஓ.. எவ்ளோ நேரமாகும்?"

"ஒரு அரைமணி நேரம்டா கண்ணா" என்றவளிடம்


"அப்போ கணேஷ் அண்ணாவ கார் எடுத்துட்டு வீட்டுக்கு வர சொல்லிடவா?"

"ஓக்கே!!! ஆனா இவ்ளோ சீக்கிரமே ரிஜிஸ்டர் ஆபீஸுக்கு போகணுமா?" என்று கேட்டவளிடம் மறைந்திருந்த சோகம் வெளிப்பட்டது.

" அப்புறம். அவங்க குடுத்த நேரம் முடிஞ்ச பிறகு போவோமா?"

"இல்ல. எல்லாமே வேகமா நடக்குற மாதிரி தோணுது ரகு" என்று ஜெயஸ்ரீ  முணங்கினாள்.

"கவலப்படாத ஜெயா குட்டி. எல்லாம் சரியா போய்ரும். நான் அண்ணாவ கார் எடுத்துட்டு வர சொல்றேன். ஒரு எட்டு மணி போல அண்ணா வந்துருவார். அதுக்குள்ள ரெடி ஆய்ருமா" என்றான்.

"சரிங்க காதலரே. இப்ப என்ன ரெடி ஆக  விடுங்க" என்று ஜெயஸ்ரீ போனைத் துண்டித்தாள்.

ரகுவை அவளுக்கு பிடித்ததற்கு காரணம் என்னவென்று இது வரை அவளுக்கு புரிந்ததில்லை. அவன் அவ்வளவு அழகு என்றும் கூற முடியாது. படித்தவனும் கிடையாது. அன்பாக பேசி மயக்கியவனும் கிடையாது. சொல்லப் போனால், அனைவரையும் விட ஜெயஸ்ரீயை மிகவும் காயப்படுத்தியவன், ரகு. காதலுக்கு கண் இல்லை என்று பலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், காதலுக்கு கண், வாய், மூக்கு, காது என்று எதுவுமே இல்லை என்று ஜெயஸ்ரீயின் காதல் நிரூபித்தது.


கடைசியாக ஒரு முறை கன்னிப் பெண்ணாக கண்ணாடி முன்பு நின்று, தன்னை முழுவதுமாக ரசித்துக் கொண்டாள். பெற்றோரும் உடனிருந்தால், ஒரு களை வந்திருக்குமே, அதை புன்னகையின் மூலம் வர வைக்க முயற்சித்தாள். பின் தன்னுடைய ஹேன்ட் பேக்கை எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறினாள்.

ஜெயஸ்ரீ, நன்றாக படித்த பெண். இப்போது, பெங்களூருவில் வேலை செய்கிறாள். அழகான மெல்லிய தோற்றம். சுண்டினால் இரத்தம் வரும் அளவுக்கு, எலுமிச்சை நிறத்தை ஒத்த நிறம். ஆறடி கூந்தலை வைத்து, ஐடி கம்பெனியில் சமாளிக்க முடியாத சூழ்நிலை வந்த பட்சத்தில், தன்னுடைய கூந்தலை தேவைக்கேற்ப வெட்டிக் கொண்டாள். இருந்தாலும் அவளுடைய அழகு இன்னும் குறைந்ததாக இல்லை.

அவளுடைய கண்களில், நட்சத்திரங்கள் குடி கொண்டு அவை மினுமினுக்கின்றனவோ என்று பார்ப்பவருக்கு சந்தேகம் ஏற்படும். மற்றவரை சுண்டி இழுக்கும் அந்த கண்களுக்கு மேலே, மன்மதனின் வில் போன்ற புருவங்கள், எந்த ஆடவனையும் அவளிடம் மயங்க செய்யும். ஐடி கம்பெனியில் பணி புரிவதால், பார்ட்டி என்று பெங்களூருவில் சுற்றுவது உண்டு. ஜீன்ஸும் சிக்கென்று டி-சர்ட்டும் போட்டு திரிந்த ஜெயஸ்ரீயா இவ்வாறு பட்டுப்புடவையில் வருகிறாள் என்று ஐடி கம்பெனியில் ஜெயஸ்ரீயைப் பார்த்தவர்களுக்கு சந்தேகம் வரலாம்.

இன்று, தன்னுடைய கடந்த காலத்தை எல்லாம் விட்டுவிட்டு, ஒரு குடும்ப பெண்ணாக மாறும் ஜெயஸ்ரீக்கு வாழ்க்கையின் நிஜங்களை சந்திக்கும் சக்தி இருக்கிறதா என்று தெரியவில்லை. இருந்தாலும், உதட்டில் புன்னகையுடன் கதவை சாத்திவிட்டு, கீழே நின்று கொண்டிருந்த காரை நோக்கி, அன்ன நடை போட்டாள்.

"என்ன அண்ணா? எப்படி இருக்கீங்க?" என்று கேட்டுக் கொண்டே கார் கதவை ஜெயஸ்ரீ திறந்தாள். இதுவரை, சீராக ஓடி கொண்டிருந்த கடிகாரம் போல அடித்துக் கொண்டிருந்த இதயம், கார் கதவை திறந்ததும், ரேஸ் குதிரையைப் போல ஓடத் துவங்கியது. காரில் ஏறியவளுக்கு, காருக்குள் ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது தெரியவந்தது. 

Tuesday, 30 April 2013

முரண்


இன்றும் சாப்பிட வெகு நேரமாகிவிட்டது. இரவு ஒன்பது மணி. மற்ற குடும்பங்களில் இது இரவு சாப்பாட்டிற்கு சரியான நேரமே என்றாலும், மாலாவின் வீட்டில் இது வெகு நேரம். அதுவும் மாலாவின் அப்பாவுக்கு இரவு சாப்பாட்டிற்கு ரொம்ப ரொம்ப தாமதம் என்றே சொல்ல வேண்டும். அவரைப் பொருத்தவரை இரவு சீக்கிரம் சாப்பிட்டு காலையில் சீக்கிரம் எழுந்திரிக்கும் பழக்கமே சீரான ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும். எனவே இரவு எட்டு மணிக்குள் மாலாவின் அப்பா சாப்பிட்டு, பத்து மணிக்குள் தூங்கியும் விடுவார். ஆனால் மாலாவிற்கு இது ஏனோ பிடிக்கவில்லை. அவளைப் பொருத்தவரை மனிதர்கள் மனிதர்களாக இருக்க வேண்டும்; ஒரு இயந்திரத்தைப் போல இருக்க கூடாது.
    
             மாலாவுக்கும் அவளுடைய இயந்திர அப்பாவுக்கும் பத்து பொறுத்தம். அப்பாவுக்கு செல்லப் பிள்ளையாக இருந்தாலும் கூட, அவருடைய பிள்ளை தானா இவள் என்று பார்ப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்ப்படும் அளவிற்கு இருவருக்கும் பொறுத்தம்.

அப்பா எந்த புத்தகத்தை வாங்கினாலும் அழகாக சிறிது முனை கூட மடங்காமல் பாதுகாப்பார். மாலாவோ புத்தகம் படிப்பதற்கு தான், ஷோ கேசில் வைப்பதற்கு அல்ல என்று எண்ணுவாள். அது மட்டுமில்லாமல், சில சமயங்களில் படித்ததற்கு அடையாளமாக புத்தகத்தைக் கிழித்தே விடுவாள்.  அவர் ஊருக்குப் பயப்படுவார். ஆனால் இவளோ யாரைக் கண்டும் பயப்படமாட்டாள். மாலாவைப் பொருத்தவரை எல்லாருமே ஒரு உயிரினம் தான். இந்த உலகத்தில் அவரவர் மனத்திற்கு மட்டும் பயந்தால் எந்த தவறும் நடக்க வாய்ப்பில்லை.

மாலாவின் அப்பா வீட்டில் வந்தாலே சிடு சிடு என்று மூஞ்சை வைத்துக் கொள்வார். பல நாள்களில் அப்பா வீட்டுக்கு வெளியில் சிரிப்பதும் வீட்டுக்குள் நுழைந்தவுடன் கோபமாக வார்த்தைகளைக் கொட்டுவதும், மாலாவுக்கு மட்டுமல்ல அவளது குடும்பத்திலுள்ள எல்லாருக்கும் தெரிந்த விஷயம். மாலாவிற்கு கோபம் பிடிக்காது. கோபத்தால் எதையும் சாதிக்க முடியாது. அதனால் யாருக்கு என்ன பயன்? எனவே கோபத்தை அடக்கி கொள்வாள். அவளை மீறி கோபம் வந்தால், அதை வெளிக்காட்டும் சமயங்களை விட, அதனால் அவள் அழும் சமயங்களே அதிகம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்படி எல்லாம் இருந்தாலும் கூட மாலாவிற்கு அவளுடைய அப்பாவை ரொம்பவும் பிடிக்கும். ஆனால் மாலாவிற்கு மிகவும் பிடிக்காத ஒரு குணம், அப்பாவின் முன்கோபம். விசாரிக்காமல் கோபப்படுவார். தொட்டதுக்கு எல்லாம் கோபப்படுவார். மாற்ற முடியும் விஷயத்திற்கும் கோபம் வரும். மாற்ற முடியாத விஷயங்களுக்கும் கோபம் வரும்.  இப்படி எதற்க்கெடுத்தாலும் கோபம் ... கோபம்... கோபம் என்று, அப்பா கோபப்படும் விஷயங்களை வரையறுத்துக் கூற முடியாது.

அதே போல் மாலாவிடம் குடியிருக்கும்  முற்போக்கு சிந்தனையை ஒரு காலமும் அவளுடைய தந்தை ரசித்தது கிடையாது. மாலாவுக்கும் அவள் தந்தையைப் போலவே நிறைய புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் உண்டு. ஆனால், இருவரும் வாசிக்கும் கருத்துக்கள் தான் ஒற்றுமையாக இருக்காது. சிறு வயதில் மாலாவும் அவளுடைய குடும்பமும், சிறு வாடகை வீட்டில் தங்கி இருந்த போது, அவளுடைய அப்பா அவளுக்கு வாசிக்கும் பழக்கத்தைப் விதைத்தார். மாலா வளர வளர அவள் தங்கி இருந்த வீடு ஒரு சொந்த வீடாக மாறியது. அதே போல் அவளுடைய எண்ணங்களும் வளர்ந்தன. சிறு வயதில் சின்ன சின்ன கதைகளைப் படித்து வந்த மாலா, கல்லூரியில் சேர்ந்த பிறகு, நிறைய மனிதர்களிடம் பழக பழக, வாசிக்கும் புத்தகங்களும் பெரிய சாதனையாளர்கள் பற்றியதாக மாறியது. அவளுடைய வாசிப்பில் அவள் காந்தி, வ.உ.சிதம்பரம் பிள்ளை, பாரதியார் போன்ற மாமனிதர்களை மனக்கண் முன் கண்டாள். இந்த பழக்கங்களால் மனதில் சிற்சில முற்போக்கு சிந்தனைகள் மனதில் தலை தூக்கும். உடனே அவளுடைய நெருங்கிய நண்பரான அப்பாவிடம் மனம் திறப்பாள். மனம் திறப்பதால் அப்பாவிற்கு கோபம் மூக்குக்கு மேல் வரும். ஆனால் பாவம் மாலா, அவளால் எவ்வளவு முயற்ச்சித்தும் அவளுடைய எண்ணங்களை மாற்ற முடியவில்லை. ஏன் மக்கள் அனைவரும் மற்றவர்களுக்காக வாழுகிறார்கள்? ஏன் இறைவன் ஜாதி மதம் என்று உருவாக்கினான்? மடிந்தால் மக்கிப் போகும் உடம்புக்காக ஒவ்வொருவரும் எப்படி வேதனைப்படுகிறார்கள்? இவ்வாறெல்லாம் எண்ணங்கள் தோன்றி அவளை சிந்திக்க வைக்கும்.

அன்று மாலாவிற்கு சாப்பிடும் தட்டைப் பார்த்து அழுகை அழுகையாய் வந்து கொண்டிருந்த்து. மிகவும் சிரமப்பட்டு சாப்பிட்டு கொண்டிருந்தாள். நெஞ்சை அடைத்துக் கொள்ளும் அளவுக்கு சொல்ல முடியாத சோகம் இருப்பது போல் மாலா உணர்ந்தாள். முந்தைய நாள் எப்போதும் போல அப்பா தேவையில்லாமல் கத்த ஆரம்பித்ததால், எப்போதும் போல இவர் ஏன் வீட்டிற்கு வந்தார் என்று தோன்றியது. ஆனால், எப்போதும் போல இல்லாமல் மாலா அன்று மனதில் தோன்றியதை வெளியில் சொல்லிவிட்டாள்.

“ஏன் இவர் வீட்டுக்கு வர்ராரோ? என்று எரிச்சலாக சொன்னது அவள் அப்பா காதுகளுக்கு எட்ட, “என்ன . . . என்ன சொன்னா இவ? என்று அப்பா இன்னும் உச்ச கட்ட கோபத்தில் அம்மாவிடம் கேட்க “எனக்கு தெரியாதுங்க என்று அம்மா சொன்னதும், “ஏன் வர்றேன்னா கேக்கறா இவ? இனி இந்த மூதேவிக்கும் எனக்கும் பேச்சு வார்த்தைக் கிடையாது என்றார் அப்பா.

இதைக் கேட்டதும் எவ்வளவோ முறை இந்த வசனத்தை மாலா கேட்டிருந்தாலும், அவள் கண்களில் கண்ணீர் துளிகள் கன்னத்தில் உருண்டோடின. அவர் பேசி விடுவார் என்று தெரிந்தாலும், அப்பாவின் கோபம் அவளை அழ வைத்த்து.

மாலா தட்டைப் பார்த்து அழுது பல மாதங்கள் ஆகிவிட்டன. இன்று மீண்டும் இவ்வாறு அழுவாள் என்று அவள் நினைக்கவில்லை. இந்த பழக்கமும் மாலாவிற்கு அவளுடைய அருமை தந்தையின் கோபத்தினால் தான் உருவானது.

மாலா பசி தாங்க மாட்டாள். ஒரு நாள், மாலா அவளுடைய பாட்டி வீட்டிற்கு சென்றிருந்த போது அடக்க முடியாத பசி வந்துவிட்ட்து. சரியென்று தட்டில் சாப்பாடு போட்டுக் கொண்டு முதல் வாய் அள்ளி சாப்பிடும் சமயத்தில், “இன்று சோமவாரம்.... இன்று போய் மாமிசம் சாப்பிடுறியே .... அறிவு கெட்ட மூதி... என்று கடுமையாக அப்பா திட்டிக் கொண்டே அடுப்பாங்கறைக்குள் நுழைந்தார்.

அது வரை என்ன சாப்பாடு என்ன நாள் என்று ஆராயாத மாலா, தட்டை அப்படியே கீழே ஞங்கென்று போட்டுவிட்டு கதறி அழுதாள். அப்பா திட்டியாதாலோ அல்லது பசியாலோ, மாலாவின் கோபத்தையும் அழுகையையும் அவளாள் அடக்க முடியவில்லை. அதற்கு அடுத்த நாளே, திரும்பவும் ஏதோ பிரச்சனை வந்ததால், அதிலிருந்து மாலாவால் இரவு சாப்பாட்டை சாப்பிட முடியாமல் அழுகை அழுகையாய் வரும். ஆனால் கல்லூரியில் நண்பர்களுடன் சேர்ந்து சிரித்து பழகினால், இந்த பழக்கம் மறைந்துவிடும். வீட்டிற்கு வந்தால், அதுவும் அப்பா அவர் கோவத்தை இவளிடம் காட்டினால், மனநோயும் உடல் நோயும் சேர்ந்தது போல அழுகையும் பசியும் சேர்ந்து வரும்.

பல சமயங்களில் அப்பா மேல் கோவம் வந்தாலும், மாலா கோவத்தை அடக்கிக் கொள்வாள். ஒரு சில சமயங்களில் வாய்விட்டு அழுதாலும், பல சமயங்களில் நெஞ்சுக்குள் புழுங்கி புழுங்கி செத்து விடலாமோ என்று மாலாவுக்கு தோன்றும். ஆனால் என்ன செய்தாலும் சாவு வரும் போது தான் வரும். அந்த நொடி பிறக்கும் போதே நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. அதற்கு முன்னால் சாக நினைத்தாலும் முடியாது; பின்னால் வாழ நினத்தாலும் முடியாது.

சில பேரை நாம் தலை கீழாக நின்றாலும் மாற்ற முடியாது. இதில் மாலாவின் அப்பாவும் அடக்கம். அப்பாவின் கோபத்தால் அவர் என்னென்ன இழக்கிறாரென்று மாலாவிற்கு தெரியும். மாலாவின் உறவினர் அவளுடைய அப்பாவிடம் அதிகம் பேசாததற்கு அவருடைய கோபமே முழுமுதற் காரணம். அப்படியே சிலர் பேசினாலும் மரியாதை நிமித்தமாகவே ஓரிரு வார்த்தைகள் பேசுவார்கள். இதை விட மாலாவுடைய பாட்டி தாத்தாவே அவர்களுடைய புதல்வனைக் கண்டு அஞ்சி நடுங்குவார்கள். உள்ளுக்குள் பயம், உதட்டில் அசடு வழியும் சிரிப்புடன் அப்பாவிடம் உறவினர்கள் பேசினாலும், பின்னால் சென்று அவரை கிண்டலடிப்பதை மாலா கேட்டும் கண்டும் பல நாள் வருந்தியிருக்கிறாள். மாலாவின் மனத்தில் ஓடும் இந்த எண்ணங்கள் மாலாவுடைய அப்பாவிற்கு தெரியாது; அவருக்கு மட்டுமல்ல யாருக்குமே தெரியாது. அன்பாக பேசினாலும் அப்பாவின் குணத்தை மாற்ற முடியாது. கோபமிருக்கும் இடத்தில் தான் குணமிருக்கும். ஆனால், பிறரை புண்படுத்தும் ஒரு குணம் இருந்தால் கூட அது நம்மையே பாதிக்கும். மாலாவால் அவள் அப்பாவை மாற்ற முடியாது என்றாலும், அவரிடம் படபடவென்று பேசாமல் கோபப்படாமல், கோபத்திலிருந்து தப்பிக்க முடியும்.

இவ்வளவு எண்ணங்களையும் மனத்தில் அசைப்போட்டுக் கொண்டே சாப்பாட்டை பிசைந்துக் கொண்டே இருந்தாள். அவளுடைய அம்மா எதிரில் உட்கார்ந்து மடமடவென்று சாப்பாட்டைக் குழம்பு ஊற்றி சாப்பிட்டு முடித்திருந்தாள். உலகிலேயே மேன்மையான உணர்ச்சி தாய்மை. அம்மா மாலாவுடைய தட்டைக் கவனித்து “சாப்பிடுடி... என்று சொன்ன போது அம்மாவின் குரல் நடுக்கத்தைக் கேட்டு மாலாவின் கண்களில் நீர் அதிகமாகியது. மாலாவின் தாய் அழவில்லை என்றாலும் அழுவதற்கு அடையாளமாக அவள் குரல் தொனித்தது. மாலாவால் சாப்பிட முடியவில்லை. கண்கள் எரிச்சலூட்டின. சாப்பிடும் சாப்பாட்டின் ருசியையும் அவளால், அவள் நாவால் புத்திக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. இருந்தாலும் கஷ்டப்பட்டு சாப்பிட்டு முடித்தாள்.

அழுது அழுது கண்கள் சிவந்ததே தவிர அப்பா வீட்டிற்கு வரவில்லை. சிறு பிள்ளை அழுவது போல தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து, சாப்பிட்ட உணவை அவ்வாறு வாந்தி எடுத்தாள். அம்மா அவள் தலையைப் பிடித்துக் கொண்டாள். மாலாவை அவளுடைய அறைக்கு அழைத்து போகும் போது அவள் மயங்கி விழுந்தாள்.

அதற்கு பிறகு கண்கள் இருண்டன. மாலாவின் மனது மட்டும் அம்மா யாருக்கோ தொலைபேசியில் அழைக்கிறாள் என்பதை உணர்த்தியது. மனதும் யோசிப்பதைச் சிறுது நேரத்தில் நிறுத்தியது.

மாலா கண்ணைத் திறந்த சமயத்தில் அவளை சுற்றி ஒரு மருத்துவரும் அவளுடைய பெற்றோர்களும் நின்று கொண்டு இருந்தார்கள். உடல் இன்னும் சிறிது தொய்வாக இருப்பதை மாலா உணர்ந்தாள். மனதில் உள்ள பாரம் குறையவில்லை என்பதை அவளுடைய முகம் உணர்த்தியது. மருத்துவர், “ஷீ இஸ் ஆல் ரைட். ஆனா... என்று இழுத்தார். அவளுடைய பெற்றோர் முகத்தில் கேள்விக்குறி தெரிந்தது. மருத்துவர், “உடம்புக்கு மருந்து குடுத்துறலாம் ஆனா மனசுக்கு? என்று தொடங்கியவர், “நீங்க தான் பாத்துக்கனும் என்று தொடர்ந்து சொன்னதை உன்னிப்பாக கவனித்தார்கள் மாலாவுடைய பெற்றோர். மாலாவை ஹாஸ்ப்பிடலில் இருந்து வீட்டுக்கு இரவு நேரத்தில் அழைத்து வந்தனர். ஆனால் அப்பாவுக்கு வேலையிருந்ததால், அவரைக் காணோம்.     

மாலா சாப்பிட்டு முடித்துவிட்டு தூங்க போகும் நேரத்தில், யாரோ காலிங் பெல் அழுத்தும் சத்தம் கேட்டது. அம்மா கதவைத் திறந்ததும் “ஏன் இந்த சைக்கிளை எடுத்து உள்ளே வைக்க முடியாதா?? எல்லாம் என் தலையெழுத்து. ஒன்றாவது இந்த வீட்டில் உருப்படியா இருக்கா? என்று அப்பாவின் சத்தம் மாலாவின் செவிகளில் விழ, அப்பாவுடைய கோபத்தைப் பார்க்க விரும்பாத மாலா கண்களை இருக மூடிக் கொண்டாள். அப்பா, பொண்ணு தூங்கிட்டாளா? என்று கேட்டுக் கொண்டே மாலாவின் அறைக்குள் நுழைந்தார்.

 மாலா தூங்கியிருக்கிறாள் என்று எண்ணி அப்பா அவளுடைய தலையை பாசமாக தடவி விட்டு சென்றார். மாலாவுக்கு உடம்பின் அசதியால் கண்கள் சொக்கியது. அப்பா தன் தலையைத் தடவியது கனவா நிஜமாயென்று யோசித்துக் கொண்டே மாலாவின் மனதும் தூங்க ஆரம்பித்தது.

Saturday, 27 April 2013

அர்பணிப்பால் உருவான ‘கடவுள்’

       நடிப்பு, எனக்கு மிகவும் பிடித்த விஷயமாக இருந்தாலும், மேடை நாடகம் பார்க்காத குறை என்றுமே என் மனதிலுண்டு. இந்த குறையை உணர வைத்தவர்கள், வீட்டிலுள்ள பெரியவர்கள். அந்த காலத்தில், என்னுடைய தாத்தா நண்பர்களுடன் இணைந்து போட்ட நாடகம், நாடக மற்றும் சினிமா நடிகரான மனோஹரையே ஆச்சரியப்பட வைத்தது என்று சொல்லி சொல்லியே வீட்டில் மேடை நாடகத்தின் மேல் ஒரு போதையை உருவாக்கிவிட்டனர். ஆனால், அப்படியான மேடை நாடகங்களை நான் பார்த்ததில்லை. ‘Dance drama' என்று சங்கீத சபாவில் போடும் நாடகங்களுக்கு எப்போதாவது அப்பா அழைத்து செல்வார். என்னுடைய தீராத ஆசை, எப்படியாவது ஒரு குவாலிடி பக்கா நாடகத்தைப் பார்த்தாக வேண்டும் என்பது.

       சென்னைக்கு வந்த புதிதில் பாரதி மணி தாத்தா எழுதிய “பல நேரங்களில் பல மனிதர்கள்” புத்தக விமர்சனத்தை சுகா அண்ணன் எழுதியிருந்தார். அந்த லிங்கைப் ப(பி)டித்ததால், தாத்தாவிடம் பேசும் வாய்ப்பு கிட்டியது. அவரைப் பற்றி அதுவரை தெரியாததை சில பதிவுகளில் தேடி தெரிந்து கொண்டேன். அதில், ‘கடவுள் வந்திருந்தார்’ நாடகம் அரங்கேறுவதைப் பற்றிய பதிவைப் படித்தேன். கண்டிப்பா பார்த்தே ஆக வேண்டும் என்று அன்றே முடிவெடுத்துக் கொண்டேன். பல காரணங்களால், எங்கே நான் இந்த நாடகத்தையும் பார்க்க வாய்ப்பில்லையோ என்று ஒரு பக்கம் பயம் வேறு. ஆனால், நல்ல வேலையாக ‘கடவுள் வந்திருந்தார்’ நாடகம் அரங்கேற்றம் போது, ஒரு வேலையும் இல்லாதது என் அதிர்ஷ்டம்.

        என்றும் இல்லாத திருநாளாக, எங்கேயாவது வா என்று சொன்னாலே, “வேலை இருக்குதுடி” என்று முணங்கும் அம்மா, தாத்தாவின் நாடகம் என்று சொன்னதும், சரி என்று சம்மதித்து அப்பாவிடம் உத்தரவும் வாங்கிக் கொடுத்தாள். சென்னைக்கு புதிது என்பதால், ஒரு ஐந்து ஆறு பேரிடம் வழி கேட்டு அவசர அவசரமாக மியுசியம் தியேட்டருக்குள் நுழைந்தோம். நாடகம் ஆரம்பித்ததும், தாத்தா, அவர் மேல் மட்டும் வீசப்பட்ட விளக்கொளியில், “எல்லாரும் வந்தாச்சுனு நினைக்கிறேன்” என்று ஆரம்பித்து, இறுதியில் அவர் ஸ்ரீ சீனிவாசானந்த ஜோவாக மாறும் வரை, கவனத்தை வேறு திசையில் திருப்ப அனுமதி கூட வழங்கவில்லை, இண்ட்ரவலைத் தவிர. 

        தாத்தாவுக்கு ஏற்ற ஜோடியாக பத்மஜா நாராயணன். அவர்கள் நிறத்துக்கு எடுப்பாக மடிசாரும், அவர் நிறுத்தி நிதானமாக பேசிய பாங்கும், அவரை வீட்டிலுள்ள சராசரி பெண்ணாக பாவிக்க வைத்தது. அதுவும், தன் பெண்ணிடம், மேல் வீட்டு சுந்தர் தன் காதலை சொல்லிவிட்டான் என்பது தெரிந்ததும், ஒரு அம்மாவின் கோபத்தை மேடையில் காட்டி அசத்தினார் என்றால் அது மிகையாகாது. அதே போல், பெண்ணிடம் தனியாக கண் ஜாடையால் பேசுவது,  மச்சு வீட்டில் குடியிருக்கும் சுந்தரைத் தேவையான நேரத்தில் உபயோகித்துக் கொள்வது போன்ற காட்சிகள் ஒரு நடுத்தர அம்மாவை நினைவுபடுத்தியது.

       தாத்தாவின் வசனங்களில் பல சுஜாதாவின் வாசனைகள். அதை முக பாவத்துடனும், விவேகமாகவும் வெளிக் கொண்டு வந்தது அவருடைய திறமை. “இந்த காய்கறி நறுக்குற பழக்கம் எங்க பரம்பரைக்கே கிடையாது” என்று சொல்லும் போதும், ப்ராவிடண்ட் ஃபண்டை திராவிடன் ஃபண்ட் என்று மனைவி சொன்னதும், “ஹிந்து பேப்பரை மாவு சலிக்க மாத்திரம் உபயோகிச்சா அப்படித் தான்” என்று கடிந்து கொண்ட போதும், இரு நாளும் அரங்கம் சிரிப்பொலியில் நிறைந்தது. மேலும் பல வசனங்கள்... இதோ...

“அந்த இழவெல்லாம் அந்த இழவுல இருக்காது”

“இங்கே கை குலுக்கி பத்து மாசமாகும்”

”பூசாரி தமிழ்ல ஏமாத்துறான்... டாக்டர் இங்கிலீஸ்ல ஏமாத்துறான்.. “

           கதையில் வசுவாக வரும் வைசாலி, தன் முக பாவத்தினால் கலக்கோ கலக்கு என்று கலக்கிவிட்டாள். சுந்தர் மேல் கோபத்தையும், அப்பா பைத்தியமோ என்ற வேதனையையும், கதையின் முடிவில் சுந்தரின் மேல் வரும் காதலினால் வரும் வெட்கத்தையும் அழகாக வெளிக்கொணர்ந்தார். தாத்தா முதல் நாள், “இவ நிஜமாவே கொல்டி” என்று சொன்ன போது தான், அவருக்கு தமிழ் தெரியாது என்பதே தெரிந்தது. முதல் நாள் தாத்தா சொல்லவில்லையானால், இரண்டாவது நாளும் அவருடைய தமிழில் தெலுங்கு வாடையைக் கண்டுபிடித்திருக்க முடியாது.

             சுந்தராக நடித்த ராம், சொன்னாலும் சொல்லாவிட்டாலும், “an excellent artist". மேடை என்கிற எண்ணமே இல்லாமல், சர்வ சாதாரணமாக நடித்தார் என்பது அனைவருக்கும் உள்ளத்தில் உறைத்த ஒரு விஷயம். காதலுக்காக முதல் காட்சியில் முதலைக் கண்ணீர் வடித்து அழும் போதே, நம்மை முக பாவத்தினால் அசர வைக்கிறார். முதல் நாளில், வசு தூக்கி போட்ட தட்டிலிருந்து தப்பித்த சுந்தர், இரண்டாம் நாள் தட்டு அவரைப் பதம் பார்த்தது என்றே எண்ணுகிறேன். இருந்தாலும், வலியைக் கூட நடிப்பைப் போலவே உணர வைத்த அவருக்கு ஒரு சபாஷ். ராம் ஃபேஸ்புக்கில் இல்லையா என்று அவரிடம் கேட்ட போது, “ஃபேமஸ் ஆன பிறகு வரலாம்னு இருக்கேன்” என்று அவர் சொன்னது, அவருடைய தொலைநோக்கு பார்வையையும் கனவுகளையும் எடுத்துரைத்தது. ராம்மைத் தெரிந்தவர்கள் அவருக்கு சொல்லிவிடவும். All the best !

                மாப்பிள்ளையாக வரும் தினேஷ் ராம், லெக்சுமி அம்மா சொல்வது போலவே சிரித்த முகத்துடன் வருவதும், வசுவிடம் “சும்மா பாடேன்” என்று சொல்வதும், காதலித்து பெண் பார்க்க வந்தவர் என்பதை வெளிப்படுத்துகிறது. இது தன் முதல் மேடை நாடகம் என்பதால், சின்ன பதற்றம் இருந்தாலும், அவருடைய பங்கை அழகாகவே செய்திருக்கிறார். சித்திரமும் கைப் பழக்கம் தினேஷ். நம்ம தாத்தாவையே நடிக்க வராதுனு தான் முதல்ல சொன்னாங்களாம். அவர் பிச்சு உதறரார் பாருங்க..... அதே மாதிரி நீங்களும் வளர என் வாழ்த்துக்கள்.

       கோடங்கி ஒரே ஒரு காட்சியில் வந்தாலும், ஒரு நிஜ பூசாரியாய் மேடையில் வலம் வருகிறார். ”அம்மா... அடி அவருக்கு படாது.. பேய்க்கு தான் படும்” என்று சொல்வதும், அவர் உடம்பை உலுக்கி ஆக்‌ஷன் காமிப்பதும் உம்மென்று இருப்பவர்களையும் சிரிக்க வைத்துவிடும்.

        ஜோவுடைய கேள்விகள் ஒவ்வொன்றும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன. தனக்கு பெயரில்லை என்பதும், ஒரு மெஷினைப் போல் முதலில் பேசுவதும், சீனிவாசனின் மொழி பிராமணத் தமிழ் என்று தெரிந்ததும், ஏதோ பத்து வருடம் பழகிய நண்பரைப் போல பேசுவதும், நம்மை இருக்கையின் நுனியில் வந்து அமர செய்கின்றன. இரண்டாம் நாள், பறக்கும் தட்டில் வந்து இறங்கிய ஜோ, முதல் நாள் டெக்னிகல் பிரச்சனையால் பறக்கும் தட்டில் இறங்கவில்லை. இருந்தாலும், தாத்தா அந்த பிரச்சனையைக் கூட அழகாக, அவருடைய உடல் மொழியாலும், குரல் ஏற்ற தாழ்வுகளாலும் சமாளித்து, பறக்கும் தட்டு வந்து இறங்கும் பிம்பத்தை நம் மனக்கண் முன் கொண்டு வந்தார்.

              நாடகத்தில் பங்கு கொண்ட இதர மாந்தர்களும், தங்களுடைய நடிப்பைப் போட்டி போட்டு வெளிப்படுத்தினர். “ஆறு வருஷமா எனக்கு பிள்ளை இல்லை சாமி” என்று சரண்டராகும் டாக்டர், பதினாறு வயதினிலே படத்தில் வரும் டாக்டரைப் போல் இருந்தார். பக்கத்து வீட்டுக்காரர், “பைத்தியத்துக்கு என்ன பேசினாலும் புரியாது” என்று கூறுகையிலும், வேட்டி உருவியதும் ஓடுவதும் நமக்கு சிரிப்பாகவே உள்ளது. 

         இந்த நாடகத்தில் முக்கியமான இன்னொரு மனிதர் சுஜாதா. அவர் இன்றும் நம்மிடையே உலவிக் கொண்டிருக்கிறார் என்பதற்க்கு இந்த நாடகம் அருமையானதொரு சாட்சி. காலத்தால் அழியாத நாடகத்தை வரைந்த பெருமை, சுஜாதாவுக்கே சேரும்.

          இரண்டாம் நாளும் நாடகத்தை, அம்மா அப்பா, இருவருடனும் பார்த்தேன். ஆனால், புத்தம் புது நாடகத்தைப் பார்ப்பது போலவே தோன்றியது. இன்னும் ஒரு வாரம் போட்டிருந்தாலும் போய் பார்த்திருப்பேன். நாடகத்துக்கு செலவு செய்தது இரண்டே இரண்டு பேர் தான். எத்தனையோ சீரியல்களுக்கும் படங்களுக்கும் காசு குடுப்பவர்கள், இதற்கும் கொஞ்சம் செலவு செய்தால், நன்றாக இருக்கும்.

              பாரதி மணி தாத்தாவின் எனெர்ஜி லெவல் என்னை வியக்க வைக்கிறது. பேராசிரியர் ராமசாமி கூறியது போல, தாத்தாவை இன்னும் ஆரோக்கியமாக வைத்திருப்பது நாடகக் கலை தான் என்பதில் சந்தேகமே இல்லை. அர்பணிப்பும், காதலும் இல்லாமல் இது சாத்தியம் இல்லை. தாத்தாவின் நாடகத்தின் மேல் உள்ள பிரியத்துக்கு அவரை நமஸ்காரம் செய்ய வேண்டும். 

        நாடகத்தில் நடித்த ஒவ்வொருவரின் அர்பணிப்பால், கண்டிப்பாக கடவுள் வந்திருந்தார். 


                         

Saturday, 6 April 2013

பிறந்தநாள் வேண்டுதல்

இன்னைக்கு சுபி குட்டிக்கு பிறந்தநாள். அவளுக்கு பிடிச்ச ரோஸ் கலர்ல அப்பா கவுன் வாங்கி தந்திருந்தாராம். அந்த ரோஸ் கலருக்கு மேட்ச் ஆற மாதிரி  அம்மா வாங்கி குடுத்த கம்மலும், பாசியும் போட்டுகிட்டு  சுபி குட்டி, இன்னைக்கு ரொம்ப அழகா  இருக்கா.

தினமும் ராத்திரி, சுபியோட அப்பா அவளுக்கு கத சொல்லுவாராம். அவ கேக்குற எல்லா கேள்விக்கும் அமைதியா பதில் சொல்லுவாராம். அதுனால, அவளுக்கு அப்பாவ ரொம்ப பிடிச்சதாம்.

ஸ்கூல் இன்னைக்கு லீவ், அதுனால சுபி குட்டிக்கு இன்னும் சந்தோஷமா இருந்துச்சாம். பக்கத்து வீட்டில இருக்குற அவளோட ஃபிரெண்ட்ஸ்க்கு எல்லாம் சாக்கலேட் குடுத்துட்டு வீட்டுக்கு வந்தா சுபி குட்டி. அவ ரெண்டாப்பு படிக்குற துறு துறு சுட்டியாம்.

அப்பா அவகிட்ட, "எங்க போலாம், சுபி குட்டி பெர்த் டேக்கு ?"னு கேட்டாராம். உடனே சுபி, "பார்க்... பீச்... சினிமா.. " அப்படினு இழுத்து இழுத்து கை விரல ஒண்ணு ஒண்ணா விரிச்சப்போ, அம்மா சமையலறைல இருந்து, "முதல்ல கோவிலுக்கு போணும் சுபி குட்டி" என்று சுபி குட்டி கிட்ட சொன்னாங்களாம்.

அப்பாவும், "அது தான் கரெக்ட்" அப்படினாராம்.

"ஏன்ப்பா கோவிலுக்கு போணும்?"

"சாமி கும்பிடம்மா" அப்படின்னாராம் அப்பா.

"ஏன் சாமிய கும்பிடணும்?"

"இன்னைக்கு உன் பிறந்தநாள்ல, அதுனால"

"அதுக்கு ஏன்ப்பா கும்பிடணும்?" அப்படினு மழலையோட இழுத்து சுபி சொன்னாளாம்.

"அதுவா, சாமி நீ கேட்கிறது எல்லாம் தர்றார்ல அதுனால.. அப்புறம் வேற ஏதாவது வேணும்னாலும் சாமிகிட்ட கேட்டா தருவார் அதுனாலயும்"

"நான் சாமிய பாக்கவே இல்லயே... எனக்கு என்ன தந்தார் எப்போ தந்தார்?" அப்படின்னு மீன் போல இருந்த கண்களை விரிச்சு கேட்டாளாம் சுபி குட்டி.

"அதுவா செல்லம், சாமி நம்ம கண்ணுக்கு தெரிய மாட்டார். உனக்கு இந்த ட்ரெஸ் அப்பா வாங்கி குடுக்கல சாமி தான் வாங்கி குடுத்துச்சு. சாமி எல்லார்கிட்டயும் இருக்குறாரு"

சுபி குட்டிக்கு அப்பா சொல்றது புரியாம முழிச்சாளாம்.

"நீ ரெண்டு சாக்லேட் வச்சுருந்து, சாக்லேட் இல்லாதவங்களுக்கு ஒரு சாக்லேட் குடுத்தா, சாமி உனக்கு பத்து சாக்லேட் தருவார். அதுனால, மத்தவங்களுக்கு  நாம உதவி பண்ணா நம்ம கூடவே சாமி இருப்பார்"

இப்படி பேசிட்டு இருக்குறப்போ அம்மா வந்து, "அப்பாவும் மகளும் காலங்காத்தால ஆரம்பிச்சுட்டீங்களா? கிளம்புங்க கோவிலுக்கு" என்று சொன்னதும், அப்பா அம்மாவோட சுபி குட்டியும் கோவிலுக்கு போனா..

அப்போ கோவில் வாசல்ல நிறைய பேர், கிழிஞ்ச ட்ரெஸ் போட்டுட்டு பாவம் போல உட்கார்ந்து, பிச்சை எடுத்துட்டு இருந்தாங்களாம்.

அவங்களை பாத்ததும் சுபி குட்டி அப்பாட்ட, "யார்ப்பா இவங்கல்லாம்?" அப்படினு கேட்டா.

"இவங்கல்லாம் பிச்ச எடுக்குறாங்க. அவங்களுக்கு வீடு காசு சாப்பிட சோறு எதுவும் இல்ல. அதான் அப்படி இருக்காங்க"

"அப்பா, சாமி எது கேட்டாலும் குடுக்கும்ல. நாம எப்போவாவது தான் கோவிலுக்கு வர்றோம். நம்மட்ட எல்லாம் இருக்குது. இவங்க கோவில்லயே இருக்காங்க, ஏன் இவங்க கிட்ட ஒண்ணும் இல்ல?" என்று பட படவென கேட்டாளாம் நம்ம சுபி.

"அத நீ சாமிட்ட தான் கேக்கணும். அதுனால நாம கோவிலுக்குள்ள போலாமா?"
அப்படினு சொல்லி சுபி குட்டிய கோவிலுக்குள்ள கூப்பிட்டு போனாங்களாம்.

அப்போ சுபி குட்டி , சாமி கிட்ட "சாமி, நான் அப்பா மாதிரி ஹைட்டா வளந்ததும் , எல்லாருக்கும் உதவணும். என் கூட நீ இரு. அந்த பிச்சை எடுக்குறவங்களுக்கு எல்லாமே குடு" அப்படினு மனசுக்குள்ள சொல்லிகிட்டா நம்ம சுபி.

பிறகு வாசல்ல வர்றப்போ, அப்பாட்ட, "அப்பா, சாமி நம்ம கிட்ட இருக்க நம்ம உதவணும்ல, அந்த சோறு இல்லாதவங்களுக்கு சோறு வாங்கி தாங்களேன். ப்ளீஸ் அப்பா" அப்படினு சுபி கொஞ்சினா.

சுபியோட அம்மா, "இவங்களுக்கு சாதம் வாங்கி தந்தா, இன்னைக்கு சினிமா கிடையாது" அப்படினு சொன்னாங்களாம்.

"சரிம்மா.. சினிமா வேணாம்.. பார்க் போய் விளையாடலாம்" அப்படினு சிரிச்சுகிட்டே சுபி குட்டி சொன்னாளாம். அப்புறம், அப்பாவோட போய், பிரசாத ஸ்டால்ல புளியோதரையும் தயிர் சாதமும் வாங்கி எல்லாருக்கும் குடுத்தாளாம்.

சுபி குட்டிக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஏன்னா, சாமி அவள் கிட்ட வந்துட்டாருள்ள ... அதுனால.

இப்போ சுபி குட்டி அப்பா அம்மாவோட பார்க்ல ஊஞ்சல் ஆடுகிட்டு இருக்கா. நீங்க ரோஸ் கலர் புது கவுன் போட்ட குட்டி பொண்ண பார்க்ல பாத்தா, மறக்காம "ஹாப்பி பெர்த் டே"  சொல்லுங்க. சரியா?