நடிப்பு, எனக்கு மிகவும் பிடித்த விஷயமாக இருந்தாலும், மேடை நாடகம் பார்க்காத குறை என்றுமே என் மனதிலுண்டு. இந்த குறையை உணர வைத்தவர்கள், வீட்டிலுள்ள பெரியவர்கள். அந்த காலத்தில், என்னுடைய தாத்தா நண்பர்களுடன் இணைந்து போட்ட நாடகம், நாடக மற்றும் சினிமா நடிகரான மனோஹரையே ஆச்சரியப்பட வைத்தது என்று சொல்லி சொல்லியே வீட்டில் மேடை நாடகத்தின் மேல் ஒரு போதையை உருவாக்கிவிட்டனர். ஆனால், அப்படியான மேடை நாடகங்களை நான் பார்த்ததில்லை. ‘Dance drama' என்று சங்கீத சபாவில் போடும் நாடகங்களுக்கு எப்போதாவது அப்பா அழைத்து செல்வார். என்னுடைய தீராத ஆசை, எப்படியாவது ஒரு குவாலிடி பக்கா நாடகத்தைப் பார்த்தாக வேண்டும் என்பது.
சென்னைக்கு வந்த புதிதில் பாரதி மணி தாத்தா எழுதிய “பல நேரங்களில் பல மனிதர்கள்” புத்தக விமர்சனத்தை சுகா அண்ணன் எழுதியிருந்தார். அந்த லிங்கைப் ப(பி)டித்ததால், தாத்தாவிடம் பேசும் வாய்ப்பு கிட்டியது. அவரைப் பற்றி அதுவரை தெரியாததை சில பதிவுகளில் தேடி தெரிந்து கொண்டேன். அதில், ‘கடவுள் வந்திருந்தார்’ நாடகம் அரங்கேறுவதைப் பற்றிய பதிவைப் படித்தேன். கண்டிப்பா பார்த்தே ஆக வேண்டும் என்று அன்றே முடிவெடுத்துக் கொண்டேன். பல காரணங்களால், எங்கே நான் இந்த நாடகத்தையும் பார்க்க வாய்ப்பில்லையோ என்று ஒரு பக்கம் பயம் வேறு. ஆனால், நல்ல வேலையாக ‘கடவுள் வந்திருந்தார்’ நாடகம் அரங்கேற்றம் போது, ஒரு வேலையும் இல்லாதது என் அதிர்ஷ்டம்.
என்றும் இல்லாத திருநாளாக, எங்கேயாவது வா என்று சொன்னாலே, “வேலை இருக்குதுடி” என்று முணங்கும் அம்மா, தாத்தாவின் நாடகம் என்று சொன்னதும், சரி என்று சம்மதித்து அப்பாவிடம் உத்தரவும் வாங்கிக் கொடுத்தாள். சென்னைக்கு புதிது என்பதால், ஒரு ஐந்து ஆறு பேரிடம் வழி கேட்டு அவசர அவசரமாக மியுசியம் தியேட்டருக்குள் நுழைந்தோம். நாடகம் ஆரம்பித்ததும், தாத்தா, அவர் மேல் மட்டும் வீசப்பட்ட விளக்கொளியில், “எல்லாரும் வந்தாச்சுனு நினைக்கிறேன்” என்று ஆரம்பித்து, இறுதியில் அவர் ஸ்ரீ சீனிவாசானந்த ஜோவாக மாறும் வரை, கவனத்தை வேறு திசையில் திருப்ப அனுமதி கூட வழங்கவில்லை, இண்ட்ரவலைத் தவிர.
தாத்தாவுக்கு ஏற்ற ஜோடியாக பத்மஜா நாராயணன். அவர்கள் நிறத்துக்கு எடுப்பாக மடிசாரும், அவர் நிறுத்தி நிதானமாக பேசிய பாங்கும், அவரை வீட்டிலுள்ள சராசரி பெண்ணாக பாவிக்க வைத்தது. அதுவும், தன் பெண்ணிடம், மேல் வீட்டு சுந்தர் தன் காதலை சொல்லிவிட்டான் என்பது தெரிந்ததும், ஒரு அம்மாவின் கோபத்தை மேடையில் காட்டி அசத்தினார் என்றால் அது மிகையாகாது. அதே போல், பெண்ணிடம் தனியாக கண் ஜாடையால் பேசுவது, மச்சு வீட்டில் குடியிருக்கும் சுந்தரைத் தேவையான நேரத்தில் உபயோகித்துக் கொள்வது போன்ற காட்சிகள் ஒரு நடுத்தர அம்மாவை நினைவுபடுத்தியது.
தாத்தாவின் வசனங்களில் பல சுஜாதாவின் வாசனைகள். அதை முக பாவத்துடனும், விவேகமாகவும் வெளிக் கொண்டு வந்தது அவருடைய திறமை. “இந்த காய்கறி நறுக்குற பழக்கம் எங்க பரம்பரைக்கே கிடையாது” என்று சொல்லும் போதும், ப்ராவிடண்ட் ஃபண்டை திராவிடன் ஃபண்ட் என்று மனைவி சொன்னதும், “ஹிந்து பேப்பரை மாவு சலிக்க மாத்திரம் உபயோகிச்சா அப்படித் தான்” என்று கடிந்து கொண்ட போதும், இரு நாளும் அரங்கம் சிரிப்பொலியில் நிறைந்தது. மேலும் பல வசனங்கள்... இதோ...
“அந்த இழவெல்லாம் அந்த இழவுல இருக்காது”
“இங்கே கை குலுக்கி பத்து மாசமாகும்”
”பூசாரி தமிழ்ல ஏமாத்துறான்... டாக்டர் இங்கிலீஸ்ல ஏமாத்துறான்.. “
கதையில் வசுவாக வரும் வைசாலி, தன் முக பாவத்தினால் கலக்கோ கலக்கு என்று கலக்கிவிட்டாள். சுந்தர் மேல் கோபத்தையும், அப்பா பைத்தியமோ என்ற வேதனையையும், கதையின் முடிவில் சுந்தரின் மேல் வரும் காதலினால் வரும் வெட்கத்தையும் அழகாக வெளிக்கொணர்ந்தார். தாத்தா முதல் நாள், “இவ நிஜமாவே கொல்டி” என்று சொன்ன போது தான், அவருக்கு தமிழ் தெரியாது என்பதே தெரிந்தது. முதல் நாள் தாத்தா சொல்லவில்லையானால், இரண்டாவது நாளும் அவருடைய தமிழில் தெலுங்கு வாடையைக் கண்டுபிடித்திருக்க முடியாது.
சுந்தராக நடித்த ராம், சொன்னாலும் சொல்லாவிட்டாலும், “an excellent artist". மேடை என்கிற எண்ணமே இல்லாமல், சர்வ சாதாரணமாக நடித்தார் என்பது அனைவருக்கும் உள்ளத்தில் உறைத்த ஒரு விஷயம். காதலுக்காக முதல் காட்சியில் முதலைக் கண்ணீர் வடித்து அழும் போதே, நம்மை முக பாவத்தினால் அசர வைக்கிறார். முதல் நாளில், வசு தூக்கி போட்ட தட்டிலிருந்து தப்பித்த சுந்தர், இரண்டாம் நாள் தட்டு அவரைப் பதம் பார்த்தது என்றே எண்ணுகிறேன். இருந்தாலும், வலியைக் கூட நடிப்பைப் போலவே உணர வைத்த அவருக்கு ஒரு சபாஷ். ராம் ஃபேஸ்புக்கில் இல்லையா என்று அவரிடம் கேட்ட போது, “ஃபேமஸ் ஆன பிறகு வரலாம்னு இருக்கேன்” என்று அவர் சொன்னது, அவருடைய தொலைநோக்கு பார்வையையும் கனவுகளையும் எடுத்துரைத்தது. ராம்மைத் தெரிந்தவர்கள் அவருக்கு சொல்லிவிடவும். All the best !
மாப்பிள்ளையாக வரும் தினேஷ் ராம், லெக்சுமி அம்மா சொல்வது போலவே சிரித்த முகத்துடன் வருவதும், வசுவிடம் “சும்மா பாடேன்” என்று சொல்வதும், காதலித்து பெண் பார்க்க வந்தவர் என்பதை வெளிப்படுத்துகிறது. இது தன் முதல் மேடை நாடகம் என்பதால், சின்ன பதற்றம் இருந்தாலும், அவருடைய பங்கை அழகாகவே செய்திருக்கிறார். சித்திரமும் கைப் பழக்கம் தினேஷ். நம்ம தாத்தாவையே நடிக்க வராதுனு தான் முதல்ல சொன்னாங்களாம். அவர் பிச்சு உதறரார் பாருங்க..... அதே மாதிரி நீங்களும் வளர என் வாழ்த்துக்கள்.
கோடங்கி ஒரே ஒரு காட்சியில் வந்தாலும், ஒரு நிஜ பூசாரியாய் மேடையில் வலம் வருகிறார். ”அம்மா... அடி அவருக்கு படாது.. பேய்க்கு தான் படும்” என்று சொல்வதும், அவர் உடம்பை உலுக்கி ஆக்ஷன் காமிப்பதும் உம்மென்று இருப்பவர்களையும் சிரிக்க வைத்துவிடும்.
ஜோவுடைய கேள்விகள் ஒவ்வொன்றும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன. தனக்கு பெயரில்லை என்பதும், ஒரு மெஷினைப் போல் முதலில் பேசுவதும், சீனிவாசனின் மொழி பிராமணத் தமிழ் என்று தெரிந்ததும், ஏதோ பத்து வருடம் பழகிய நண்பரைப் போல பேசுவதும், நம்மை இருக்கையின் நுனியில் வந்து அமர செய்கின்றன. இரண்டாம் நாள், பறக்கும் தட்டில் வந்து இறங்கிய ஜோ, முதல் நாள் டெக்னிகல் பிரச்சனையால் பறக்கும் தட்டில் இறங்கவில்லை. இருந்தாலும், தாத்தா அந்த பிரச்சனையைக் கூட அழகாக, அவருடைய உடல் மொழியாலும், குரல் ஏற்ற தாழ்வுகளாலும் சமாளித்து, பறக்கும் தட்டு வந்து இறங்கும் பிம்பத்தை நம் மனக்கண் முன் கொண்டு வந்தார்.
நாடகத்தில் பங்கு கொண்ட இதர மாந்தர்களும், தங்களுடைய நடிப்பைப் போட்டி போட்டு வெளிப்படுத்தினர். “ஆறு வருஷமா எனக்கு பிள்ளை இல்லை சாமி” என்று சரண்டராகும் டாக்டர், பதினாறு வயதினிலே படத்தில் வரும் டாக்டரைப் போல் இருந்தார். பக்கத்து வீட்டுக்காரர், “பைத்தியத்துக்கு என்ன பேசினாலும் புரியாது” என்று கூறுகையிலும், வேட்டி உருவியதும் ஓடுவதும் நமக்கு சிரிப்பாகவே உள்ளது.
இந்த நாடகத்தில் முக்கியமான இன்னொரு மனிதர் சுஜாதா. அவர் இன்றும் நம்மிடையே உலவிக் கொண்டிருக்கிறார் என்பதற்க்கு இந்த நாடகம் அருமையானதொரு சாட்சி. காலத்தால் அழியாத நாடகத்தை வரைந்த பெருமை, சுஜாதாவுக்கே சேரும்.
இரண்டாம் நாளும் நாடகத்தை, அம்மா அப்பா, இருவருடனும் பார்த்தேன். ஆனால், புத்தம் புது நாடகத்தைப் பார்ப்பது போலவே தோன்றியது. இன்னும் ஒரு வாரம் போட்டிருந்தாலும் போய் பார்த்திருப்பேன். நாடகத்துக்கு செலவு செய்தது இரண்டே இரண்டு பேர் தான். எத்தனையோ சீரியல்களுக்கும் படங்களுக்கும் காசு குடுப்பவர்கள், இதற்கும் கொஞ்சம் செலவு செய்தால், நன்றாக இருக்கும்.
பாரதி மணி தாத்தாவின் எனெர்ஜி லெவல் என்னை வியக்க வைக்கிறது. பேராசிரியர் ராமசாமி கூறியது போல, தாத்தாவை இன்னும் ஆரோக்கியமாக வைத்திருப்பது நாடகக் கலை தான் என்பதில் சந்தேகமே இல்லை. அர்பணிப்பும், காதலும் இல்லாமல் இது சாத்தியம் இல்லை. தாத்தாவின் நாடகத்தின் மேல் உள்ள பிரியத்துக்கு அவரை நமஸ்காரம் செய்ய வேண்டும்.
நாடகத்தில் நடித்த ஒவ்வொருவரின் அர்பணிப்பால், கண்டிப்பாக கடவுள் வந்திருந்தார்.
அருமை... பற்க்கும் தட்டுக்காகவே படித்தேன்... :)
ReplyDeleteநன்றி Sugumar Je :) உங்களுடைய பறக்கும் தட்டு ... அருமை :)
Deleteகடவுள் வந்திருந்தார்... நல்லதொரு விமர்சனம்... :)
ReplyDeleteநன்றி ராம்குமார்-அமுதன் :)
Delete